டெல்லி: ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் வலியுறுத்தி உள்ளார்.
நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையிலும் நடக்க உள்ளது. அதே போன்று ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது.
கொரோனா காலத்தில் இந்த தேர்வுகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரும் என்பதால் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நீட் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு கோரி வருகின்றனர்.
இந் நிலையில், நீட், ஜேஇ இ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் அமைச்சருக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கொரோனாவுக்கு மத்தியில் தேர்வுகள் நடத்துவது ஆபத்தானது. இந்த நேரத்தில் இதுபோன்ற முக்கியமான தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே, ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.