புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில், தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில், பொதுத்துறையை சேர்ந்த பல வங்கிகள், பங்குகளை விற்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வங்கிகள், தங்களுடைய பங்குகளை, நிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை மேற்கொள்ளவிருக்கின்றன.
இவை தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பங்குகளை விற்பனை செய்ய இருக்கின்றன. வங்கிகள், இரண்டாவது காலாண்டு நிதி நிலை அறிக்கைகளை இறுதிசெய்த பிறகு, தங்களுடைய பங்குகளை தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து, நிதியை திரட்டும் என்று துறை சார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மேலும் கூறப்படுவதாவது; வரும் அக்டோபர் மாத இறுதிக்குள், வங்கிகள் தங்களது வாராக் கடன் மற்றும் ஒருமுறை கடன் மறுசீரமைப்பு ஆகியவை குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிடும். இந்த இடைப்பட்ட காலத்துக்குள், பங்குகளை எப்போது விற்பனை செய்வது, யார் மூலமாக இந்த பணிகளை நிர்வகிப்பது என்பது போன்ற விஷயங்களையும் முடிவு செய்துவிடும்.
நான்கிலிருந்து ஐந்து வங்கிகள், மூன்றாம் காலாண்டு இறுதியிலோ அல்லது கடைசி காலாண்டிலோ இந்த முயற்சிகளில் இறங்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்கள் மூலம் நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, நான்காவது காலாண்டில், மூலதனத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.