கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந்தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக கூறி அதை சபைக்கு கொண்டு வந்து காட்டினர். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இது அவை உரிமையை மீறிய செயல் என கூறி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதைஎதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு கடந்த வாரம் விசாரணை நடத்தியது.
அப்போது, திமுக தரப்பில், தடை விதிக்கப்பட்ட குட்கா எளிதில் கடைகளில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்ட மன்றத்துக்கு குட்கா பொருட்களை எடுத்துச் செல்லப்பட்டது என்றும், இதில் உரிமை மீறல் இல்லை என்று வாதிடப்பட்டது. அப்போது, சபாநாயகர் தரப்பில், தடை செய்யப்பட்ட பொருளை, சபையில் காட்டியது உரிமை மீறலா இல்லையா என்பதை தான் பார்க்க வேண்டும். அவையின் கண்ணியத்தை காக்கவே உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வாதிடப்பட்டது.
மூன்று நாள்கள் தொடர் விசாரணை முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்த உயர்நீதி மன்றம், புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்று கூறி உள்ளது.
உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால், அது ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறி உள்ளது.
இதன் காரணமாக திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எடுக்கவிருந்த முயற்சி தோல்வி யடைந்துள்ளது. அதே வேளையில், சபாநாயகர் அதிகாரத்திலும், சட்டமன்ற விவகாரத்தில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்பதும் தெளிவாகி உள்ளது.