வேறுசில கட்சிகளுடன் சேர்ந்து, காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது.
இச்செயல் அக்கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கணித்துள்ளார் கட்டுரையாளர் யாஷ் ஜோஷி என்பவர்.
அவர் கூறியுள்ளதாவது, “மெஹ்பூபாவின் பிடிபி, சிபிஎம், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான் 370வது பிரிவை மீண்டும் கொண்டுவருவதற்கு பாடுபடுவோம் என்றுள்ளது காங்கிரஸ் கட்சி.
ஆனால், இதன்மூலம் அக்கட்சி ஒரு பெரிய தவறை இழைக்கிறது. 370வது பிரிவு நீக்க நடவடிக்கைக்கு அக்கட்சியின் இளம் தலைமுறை தலைவர்கள் பலரே(ஜோதிராதித்யா சிந்தியா, தீபேந்தர் ஹூடா, ஜிதின் பிரசாதா) ஆதரவு தெரிவித்தனர். இதை அக்கட்சி புரிந்துகொள்ள வேண்டும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றுள்ளது காங்கிரஸ் கட்சி. ஆனால், இந்த முடிவை காஷ்மீருக்கு வெளியே பலரும் ஆதரிக்கிறார்கள். எனவே, காங்கிரசின் தற்போதைய செயல்பாடு, அக்கட்சிக்கு பாதகமான விளைவையே ஏற்படுத்தும்.
தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கை உலகளாவிய அளவில் ராஜதந்திர ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அப்படியிருக்கையில், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் இந்த செயல்பாடு, இம்ரான்கான் போன்றவர்களின் முயற்சிகளுக்கே சாதகமாக முடியும். மேலும், எதிர்காலத்தில், காங்கிரஸ் மத்தியில் வெல்லவே முடியாத சூழல் உருவாகும்” என்றுள்ளார் அவர்.