கொல்கத்தா: நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு மத்திய அரசை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடக்கிறது. அதே போன்று, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27ம் தேதியும் நடைபெறும். அதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன.

ஆனால், கொரோனா காலத்தில் தேர்வுகளை நடத்துவது என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் நீட் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது: கொரோனா நேரத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடும் . மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது நமது கடமை என்றும் கூறி உள்ளார்.