லக்னோ: போலி என்சிஇஆர்டி புத்தகங்களை அச்சடித்தது தொடர்பாக உத்தரபிரதேச பாஜக தலைவர் சஞ்சீவ் குப்தாவின் மகன் சச்சின் குப்தா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
35 கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) புத்தகங்களை அச்சிட்டதற்காக பாஜக தலைவர் சஞ்சீவ் குப்தாவின் மகன் சச்சின் குப்தா மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சச்சின் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
ஆனால் இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரட் மாவட்டத்தில் ஊழலை சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) மற்றும் போலீஸார் கண்டுபிடித்தனர், அங்கு அவர்கள் 6 அச்சிடும் இயந்திரங்களை கிடங்கிலிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து எஸ்.டி.எஃப் டி.எஸ்.பி பிரஜேஷ் குமார் சிங் கூறியதாவது: சச்சின் குப்தா தற்போது தலைமறைவாக உள்ளார், அவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சோதனைக்குப் பிறகு, போலீஸ் அதிகாரிகள் சச்சினுடன் தொலைபேசியில் பேசினர்.
அவர் புத்தகங்களின் ஆவணங்களுடன் வருவதாகக் கூறினார், ஆனால் அதன் பின்னர் வரவே இல்லை, மேலும் அவரது மொபைலையும் அணைத்துவிட்டார் என்று கூறினார்.
எஸ்.டி.எஃப் துணை ஆய்வாளர் சஞ்சய் சோலங்கி, ஆலை மேற்பார்வையாளர் மற்றும் சச்சின் குப்தா உட்பட 5 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பார்த்தாபூர் காவல் நிலையத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சச்சின் குப்தா மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் உ.பி. வாரியத்தின் போலி புத்தகங்களை அச்சிடுவதில் சச்சின் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இருப்பினும், அந்த வழக்கில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை.