ஜார்கண்ட் மாநிலம் தானாபாத்தை சேர்ந்த சாந்துகுப்தா என்பவன், கடத்தல் மற்றும் பணப்பறிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
அவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால் தானாபாத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

வலது கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்த குப்தா, மருத்துவமனை வார்டில் உள்ள தனது படுக்கையில் ’’ஹாயாக’’ அமர்ந்து, சரக்கு பாட்டிலில் இருந்து தம்ளரில் மதுவை ஊற்றி குடித்துள்ளான்.
இதனை யாரோ புகைப்படமாக எடுத்து முதல்-அமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, ட்விட்டரில் அனுப்பி வைத்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை மையத்தை சிறைக்கைதி, மதுக்கூடமாக்கி, எந்த பயமும் இல்லாமல், மது அருந்தும் காட்சியை பார்த்த முதல்வர் அதிர்ந்து போனார்.
இந்த காட்சியை அவர் தானாபாத் காவல்நிலைய துணை ஆணையர் உமா சங்கருக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த கொரோனா மையத்தில், மது பாட்டிலை, கைதி குப்தாவுக்கு யார் கொடுத்தார்கள்? என்பது தெரியவில்லை.
எந்த பயமும் இல்லாமல் அவன், படுக்கையில் இருந்த படியே, ’’சைடு டிஷ்ஷை’’ கொறித்தவாறு மது குடிக்கும் காட்சிகள், அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-பா.பாரதி.