அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பொறுப்பில் இருந்து திருமதி சோனியாகாந்தி ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நூறாண்டு கடந்த காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக போவது யார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
சமீபத்தில், பிரியங்காகாந்தி, காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக வேண்டும் என்று கூறிய நிலையில் நாளை கூட இருக்கும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வடஇந்திய ஊடகங்கள் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பரபரப்பான விவாதங்கள் நடத்தி வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை, அடுத்த தலைவர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இளந்தலைவர் ராகுல்காந்தி மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பாரா அல்லது பிரியங்கா கூறியதுபோல, வேறு ஒருவர் தலைவராக வாய்ப்பு உள்ளதாக என்று பரபரப்பான விவாதங்களும், விமர்சனங்களும் போய்க்கொண்டிருக்கிறது.
இதுபோன்ற சூழலில் அடுத்த தலைவராகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது, யாரெல்லாம் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள் என்பது குறித்து சற்றே ஆராயலாம்…
கடந்த ஆண்டு (2019) நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல், அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் எதிர்கொள்ளப்பட்டது. முன்னதாக ராகுல், பாஜகவுக்கு எதிராக .ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், சவுதிகார், பண மதிபிழப்பு, விவசாயிகள் பிரச்சினை உள்பட பல்வேறு மக்கள் நல பிரச்சினைகளை மக்களிடையே கொண்டு சேர்த்து, தேர்தலை சந்தித்த நிலையில், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியையே கொடுத்தன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஆய்வு கூட்டத்தில் பேசிய ராகுல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கமல் நாத், ப.சிதம்பரம் குறித்து கடுமையாக விமர்சித்த துடன், இவர்கள் கட்சியின் நலனைக் காட்டிலும் தங்களின் மகன்களின் நலன்மீது அதிக அக்கறை கொண்டவர்கள், இவர்களைப் போன்றவர்களால், தனக்கு தேர்தல் பிரசாரத்தின்போது எந்தவித உதவியும் கிட்டவில்லை என்றும், மக்கள் நலப்பிரச்சினை குறித்து யாரும் தேர்தலின்போது பேசவில்லை கடுமையாக குற்றம் சாட்டியதுடன், தனது கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க மூத்த தலைவர்கள் யாரும் முன்வராத நிலையில், இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நியமனம் செய்தது. ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும், சோனியாவும், விரைவில் தலைவரை நியமித்துவிட்டு, கட்சியில் இருந்து ஒதுங்கும் மனநிலையில் தொடர்ந்து வருகிறார். ஆனால், ஒருமித்த கருத்து ஏற்படாததாலும், தலைமை பதவிக்கு பலர் போட்டியிடுவதாலும், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கட்சிக்கு தலைவர் நியமிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி மீண்டும் படுதோல்வி அடைந்தபோதும், கட்சித் தலைமை குறித்து கேள்வி எழுந்தது. அப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்ற ராகுலின் தீவிர ஆதரவாளரான முகுல்வாஸ்னிக் (தலித் சமூகத்தை சேர்ந்தவர்), காங்கிரஸ் மூத்த தலைவர்களான கரண்சிங், அமரீந்தர் சிங், ஜனார்தன் திவேதி, கார்கே, ஷிண்டே போன்றவர்களும் களமிறங்கியதாக தகவல் வெளியானது. அப்போது நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டமும், தலைவரை தேர்வு செய்ய முடியாத நிலையே ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு முறை காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும்போதும், கட்சித் தலைவர் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாவது வாடிக்கையாகி வருகிறது.
காங்கிரசில் கட்சியில், ஏராளமான மூத்த தலைவர்கள் பலர் இருந்தும், கட்சியை வழிநடத்த பெரும்பாலோர் முன்வருவதில்லை. பலர் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களே வழிநடத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இருந்தாலும் ஒருசில மூத்த தலைவர்கள், கட்சி தலைவருக்கான கோதாவில் குதித்து, மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருவதும், ஆதரவாளர்களை திரட்டுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பலர் பலமுறை எம்.பி.க்களாகவும், முதல்வர்களாகவும் பதவி வகித்த நிலையில், கட்சி தலைமை பொறுப்பை கைப்பற்றதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவர்களில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கமல் நாத் முன்னணியில் இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கிற்ன. மேலும், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான ஏ.கே. ஆண்டனி, சசிதரூர், தமிழகத்தைச் சேர்நத் ப.சிதம்பரம் மற்றும் சல்மான் (குர்ஷித்), அகமது படேல் போன்றவர்களும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற தலைவர்களின் போட்டிகளினாலேயே, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, 100 ஆண்டுகளை கடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு சரியான , நிலையான தலைவைரை நியமிக்க முடியாமல், தலைமையின்றி கட்சி இயங்கி வருகிறது.
இந்த நிலையில், சமீபகாலமாக கட்சித் தலைவர் பதவிக்கு ப.சிதம்பரம் வர வாய்ப்பு இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தின. ஆனால், வட இந்திய ஊடகங்களோ, தென்னகத்தைச் சேர்ந்த ஒருவரை முன்னிலைப்படுத்துவதில் தயக்கம் காட்டி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத நிலையில் 63 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது. அப்போது, ஆம்ஆத்மி வெற்றிக்காக, டெல்லி மக்களுக்கு சல்யூட் அடிப்பதாக ப சிதம்பரம் வாழ்த்து தெரிவித்த விவகாரம் தற்போது மீண்டும் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், ப.சிதம்பரம் மீது ராகுல் கூறிய குற்றச்சாட்டுக்களும் மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
அதுபோல, ஏகேஅந்தோனி, சசிதரூர், கர்நாடகாவைச் சேர்ந்த் கார்கே போன்றவர்களை கண்டுகொள்ளாத வட இந்திய ஊடகங்கள், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், கமல்நாத் போன்றவர்களே காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வேண்டும் என்றும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே அசோக் கெலாட்டுக்குத்தான் அதிக ஆதரவு இருப்பதாகவும், அவரே கட்சியின் தேசிய தலைவராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைமைக்கு தீவிர அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழலில்தான் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலகிவிட்டார் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால், நாளை நடைபெற உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், சோனியா பதவியை விட்டு விலக முடிவு செய்து உள்ளதாகவும், வேறு யாராவது தலைவர் பதவி அல்லது இடைக்கால தலைவர் பதவியை வகிக்கலாம். என்னால் இனி தலைவர் பதவியில் நீடிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், பிரியங்கா காந்தி இந்திரா காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வரட்டும் என்று கூறிய தகவல் காரணமாக, கட்சி தலைமை பொறுப்பை ஏற்க ராகுலும் விரும்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க கடுமையான போட்டி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் வீறுகொண்டு எழ, காங்கிரஸ் கட்சிக்கு ராகுலை போல இளந்தலைவர்கள் தேவை என ஒருதரப்பினர் கோரிக்கை வைக்கும் நிலையில், மூத்த உறுப்பினர்களே தலைவராக வேண்டும் என்றும் மற்றொரு புறம் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் 23 தலைவர்கள், சோனியா காந்தியின் தலைமை மீதுஅதிருப்தி தெரிவித்தகடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. அதில், கட்சிக்கு முழு அளவிலான தலைவரை நியமனம் செய்யாததால், தலைமை மீதான நிச்சயமற்ற தன்மை தொண்டர்களை மனச்சோர்வடையச் செய்து, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் சோனியா காந்தி, இடைக்கால தலைவர் பதவியை துறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
100 ஆண்டு கண்ட வரலாற்று சிறப்பு மிக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகப் போவது யார்? என்ன நடக்கப்போகிறது என்பதை நாளை காரிய கமிட்டி கூட்டம் தீர்மானிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.