உத்தரபிரதேசம்:
சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட ரூபாய் 50 கோடி மதிப்பிலான என்சிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தரபிரதேசத்தின் சிறப்பு பணிக்குழு ராணுவ புலனாய்வு மற்றும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 50 கோடி மதிப்புள்ள 1.5 லட்சம் என்சிஇஆர்டி பள்ளி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மோஹ்கம்பூரிலுள்ள சப்சி மண்டியின் பிரதான தொழிற்சாலையில் இதேபோன்ற புத்தகங்களை எரித்த பின்னர் கிங்பின் மற்றும் சச்சின் குப்தா ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் பார்த்தாபூர் காவல் நிலையத்தின் அருகில் அக்ரவுண்டா சாலையில் உள்ள காசிகான் அருகே, சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடப்பதாக அறிந்தனர். உடனே அதனை கண்காணிக்க துவங்கினார். சுதந்திர தினத்திற்கு முன் எந்தவித தேசவிரோதமான செயல்களும் நடைபெறக் கூடாது என்று கண்காணித்து வரும்போது தான் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
உத்திரபிரதேசத்தின் சிறப்பு பணிக்குழு ராணுவ புலனாய்வு மற்றும் காவல்துறையினர் கூட்டாக நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக ஒன்றாம் வகுப்பிலிருந்து அனைத்து என்சிஇஆர்டி புத்தகங்களும் அச்சிடப்பட்டு வைத்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இந்த புத்தகங்களின் எண்ணிக்கை 1,50,000 அதிகமாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. புத்தகங்களின் மதிப்பு ரூபாய் 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட இந்த என்சிஇஆர்டி புத்தகங்களை உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விற்பதாகவும், யாருக்கும் எந்த சந்தேகமும் வராமலிருக்க புத்தகங்களை பாஜக கொடிகள் கொண்ட வாகனங்களில் ஏற்றி சென்றனர் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள் அங்கு வேலை பார்த்த 5 பெண்கள் உட்பட 17 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் சில பெண்களை அனுப்பி விட்டாலும் ஆண்களை இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
இது அனைத்திற்கும் காரணமான சச்சின் குப்தா, சப்சி மண்டியில் உள்ள பிரதான தொழிற்சாலையிலிருக்கும் அனைத்து புத்தகங்களையும் எரித்ததாகவும், காவல்துறையினர் அங்கு செல்வதற்கு முன் பெரும்பாலான புத்தகங்கள் எரிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவ்விடத்தில் இருந்த ஆறு அச்சிடும் இயந்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேலும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.