சண்டிகர்:
ஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தானுடன் 3,300 கி.மீ. நீளமுடைய எல்லைப் பகுதியைப் பகிர்ந்து கொள்ளும் இந்தப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின் அதிகபட்சமாக 5 ஊடுருவல்காரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்று பிஎஸ்எப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் எல்லையை ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பகிர்ந்துள்ளதைத் தவிர்த்து பஞ்சாப் மாநிலம் 553 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துள்ளது. மற்ற பகுதிகள் சர்வதேச எல்லைப் பகுதியாகும்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தரண் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் நடமாடுவதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, 103 பிரிவு பட்டாலியனை உஷார்படுத்தினோம்.

அதிகாலை 4.45 மணி அளவில் சிலர் தால் எல்லைப் பகுதி அருகே, அதாவது பிகிவின்ட் நகர் அருகே 5 பேர் தோளில் துப்பாக்கியுடன் வந்தனர். அவர்கள் இரவில் வந்த பகுதி உயரமான புற்கள் இருந்த பகுதி என்பதால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அதிகாலை நேரத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரிக்க முயன்றோம். அப்போது அவர்கள் தீடீரென துப்பாக்கியால் வீரர்களை நோக்கிச் சுட்டனர்.

இதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 5 பேரும் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத் துபாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அங்கு தேடுதல் நடத்தி வருகிறோம். கொல்லப்பட்ட 5 பேரும் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். 5 பேரும் டி-ஷர்ட், பேண்ட் அணிந்திருந்தார்கள்” எனத் தெரிவித்தார்.