அடுத்த 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், நரேந்திர மோடிக்கு மாற்றாக, ராகுல் காந்தி முன்னிறுத்தப்படக்கூடாது என்பதாக கூறி, அதற்கான காரணங்களாக சிலவற்றை முன்வைத்தார் ராமச்சந்திர குஹா என்கிற கட்டுரையாளர் & எழுத்தாளர். ஆனால், அவரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் காந்தியடிகள் மற்றும் ராஜாஜியின் பேரனான ராஜ்மோகன் காந்தி.

ராஜ்மோகன் காந்தி கூறியுள்ளதாவது, “மோடிக்கு மாற்றாக, தேர்தலில் ராகுலை நிறுத்துவது குறித்து குஹாவின் கருத்துக்கு நான் இங்கே பதிலளிக்க வரவில்லை. ஏனெனில், 2024 தேர்தலுக்கு இன்னும் அதிக காலம் உள்ளது. மாறாக, எனது பிரச்சினைகள் வேறானவை.

மோடியுடன் ஒப்பிடுகையில் ராகுல் பலவீனமான கோஷங்களை முன்வைக்கிறார், இந்தி மொழியில் அவருக்கான பேசும் திறன் அவ்வளவு சிறப்பாக இல்லை, ராகுலுக்கு நிர்வாக அனுபவம் இல்லை, அவரிடம் சகிப்புத்தன்மையும் மனஉறுதியும் குறைவு, அவர் ஆண்ட குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பதால், அவரை தோல்விகளின் பொருட்டு குற்றம் சாட்டுவது எளிது என்பதான 5 முக்கிய காரணங்களை முன்வைத்துள்ளார் குஹா.

அடுத்த தேசிய தேர்தலை எதிர்கொள்ளும் முன்னதாக, நாம் இன்று கண்ணால் கண்டுகொண்டிருக்கும் பிரச்சினைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. நமது ஜனநாயக இல்லத்தை தாங்கி நிற்கும் தூண்டும் பெரியளவில் அரிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டு மக்களின் பிரதான நலன் சார்ந்த வழக்குகளை, உச்சநீதிமன்றம் காரணமேயின்றி தள்ளிப் போடுகிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்தரப்பை சார்ந்த நபர்களின் மீது வருமான வரி உள்ளிட்ட சோதனைகள் திட்டமிட்ட காலத்தில் குறிவைத்து நடத்தப்படுகின்றன.

முக்கியமான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றம் விவாதம் செய்ய மறுக்கிறது மற்றும் அங்கே விவாதம் செய்ய முடிவதில்லை. காவல்துறையை எடுத்துக்கொண்டால், குற்றமிழைக்கப்பட்டவர்களின் உறவினர்களைத்தான் குறிவைக்கிறதே தவிர, குற்றவாளிகளை அல்ல.

அரசுக்கு சொந்தமான மீடியா மற்றும் அரசு நிதியுதவி பெறும் அமைப்புகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிரதமர் மோடி, கேள்வி கேட்கும் நிருபரின் முன்பாக முகத்தைக் காட்ட மறுக்கிறார். அதேசமயம், அரசின் ஆதரவைப் பெற்ற மற்றும் தீய நோக்கங்கொண்ட மீடியாக்கள் பல, வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு, சமூகத்தை பிளவுபடுத்தும் வேலைகளை செய்து வருகின்றன. மாணவர் போராட்டங்கள் போலீஸ் படைகளைக் கொண்டு ஒடுக்கப்படுகின்றன.

நிலைமை இப்படியெல்லாம் இருக்கையில், தேர்தல் சவாலைப் பற்றி பேசுகிறார் குஹா. ஒருவேளை, தேர்தல் என்பது முறையாக நடைபெறும் என்று எண்ணுகிறாரா அவர்?

எதிர்க்கட்சிகளின் நிதிநிலையை பலவீனப்படுத்தும் வகையில், தொடர் ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. மேலும், கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதோடு, தேச துரோக குற்றங்கள் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.

இதுவரையான இந்திய தேர்தல்கள், பொதுவான மனோநிலையையே பிரதிபலிப்பதாக இருந்துள்ளன. அதற்காக, தேர்தல் கமிஷனுக்கு நன்றிகூற வேண்டும். வரும் 2024 தேர்தலும் அவ்வாறே இருக்கும் என்று நம்புவோமாக!

எதிர்வரும் தேர்தலை சந்திப்பதற்கு தைரியமும் பேச்சுத் திறமையும் மிகவும் முக்கியம். ஆனால், இந்த இரண்டும் ராகுல் காந்தியிடம் குறைவு என்று எங்கும் நிரூபிக்கப்படவில்லை. இந்த விஷயத்தை குஹா உணர வேண்டும். கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி முன்வைத்த சில சுலோகங்கள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், அவர் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியிருக்கிறார்.

இன்றைய இந்தியாவில், நாம் ஒவ்வொருவருமே நமது பங்கை உணர்ந்து அதை மறுஆய்வு செய்ய வேண்டும்.

ஜனநாயகம், கருத்து மாறுபாட்டு சுதந்திரம், மதசார்பின்மை மற்றும் பன்மைத்துவம் ஆகிய அம்சங்கள் இன்றைய நிலையில், எதிர் சக்திகளிடமிருந்து கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்கின்றன. எதிரிகள் பெரும் வலிமையுடன் இருக்கிறார்கள். எனவே, இத்தகைய அத்தியவாசிய அம்சங்களைப் பாதுகாக்க, ராகுல் மட்டுமே களத்தில் இறங்கி சாதித்துவிட முடியாது; நம் ஒவ்வொருவருக்கும் அதில் பங்குண்டு.

அவர், தற்போது சண்டையிடுபவராக இருக்கிறார். அதற்காக, அவரை நான் விரும்புகிறேன். அவர் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார். இந்தியாவில், இன்றைய நிலையில், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ, அவர்களெல்லாம் எனது கூட்டாளிகள்.

அந்த கூட்டாளிகள், காங்கிரஸாக இருக்கலாம், கம்யூனிஸ்டாக இருக்கலாம், திமுகவாக இருக்கலாம், தேசியவாத காங்கிரஸாக இருக்கலாம், திரிணாமுல் காங்கிரஸாக இருக்கலாம். ஏன், அவர்கள் பாரதீய ஜனதா அல்லது ஐக்கிய ஜனதா தளத்தில்கூட இருக்கலாம். பிரச்சினை அதுவல்ல; அவர்கள் ஏழையாக அல்லது பணக்காரராக இருக்கலாம், தலித்தாக, பிராணராக, ராஜபுத்திரராக அல்லது பிற்படுத்தப்பட்டவராக இருக்கலாம். இந்துவாகவோ, சீக்கியராகவோ, நாத்திகராகவோ, முஸ்லீமாகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கலாம்.

ஆனால், இந்த நபர்களிடம் நல்ல இணக்கம் ஏற்பட்டு, அவர்கள் தங்கள் இலக்கை நோக்கி ஒற்றுமையாக நகர வேண்டுமென நான் வேண்டிக் கொள்கிறேன்.

சரியான நேரம் வரும்போது, பொது அழுத்தம் காரணமாக அரசியல் ஒற்றுமை ஏற்பட்டு, அரசியல் கூட்டணிக்கு சரியான தலைமை தேர்வு செய்யப்பட்டு, ஆதிக்கம் மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்த்து மோதல் நடைபெறும்.

டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் நாட்கள் இருக்கலாம். ஆனால், முக்கியமான போட்டிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலையில், பிட்ச் மோசமாக இருக்கிறது, போதிய வெளிச்சம் இல்லை, காற்றும் மழையும் இருக்கிறது, நடுவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதும் நமக்குத் தெரியவில்லை.

ஆனாலும், ராகுல் காந்தி விளையாடிக் கொண்டிருக்கிறார். சபாஷ்..!” என்றுள்ளார் ராஜ்மோகன் காந்தி.

நன்றி: என்டிடிவி