சென்னை: இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் என்று மோடி அரசுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் (ஆகஸ்ட்18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை) மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில், ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உட்பட நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசினார். இந்தி புரியாத தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும் இந்தி தெரியாதவவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் ராஜேஷ் கொடேஜா தெரிவித்துள்ளார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதற்க, நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து டிவிட் போட்டுள்ளார்.
அதில், ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரதமணித்திருநாடு
என்று கூறியுள்ளார்.