ஸ்ரீநகர்: இப்போதுள்ள அரசை நம்ப முடியாது, இது மகாத்மா காந்தியின் இந்தியா கிடையாது என்று ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பரூக் அப்துல்லா, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, 7 மாதங்கள் கழித்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது: இனி இந்திய அரசை நம்ப முடியாது. நாள்தோறும் அவர்கள் பொய்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போதுள்ள இந்தியா, மகாத்மா காந்தியின் இந்தியா அல்ல. பிரதமருக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், இன்னும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள் என்பதுதான். தான் செய்த காரியம் தவறு என்பது அவருக்கே நன்றாக தெரியும்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு ஒரு நாள் முன்பாக கூட பிரதமர் மோடியை சந்தித்தேன். அப்போது கூட, தீர்மானம் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குவிப்பு, சுற்றுலா பயணிகள் வெளியேற்றம், அமர்நாத் யாத்திரை ரத்து உள்ளிட்டவை குறித்து மோடியிடம் கேள்வி எழுப்பினேன். பாகிஸ்தான் உடனான போர் என்பது போன்ற நிலைமையை அப்போது காஷ்மீரில் மத்திய அரசு ஏற்படுத்தியது. பிரதமரை சந்தித்து நாங்கள் கேட்டபோது அவர் எதுவும் சொல்லவில்லை. அவர் நல்லவர், கனிவானவர் ஆனால் நம்ப முடியாதவர் என்று பரூக் அப்துல்லா கூறினார்.