புதுடெல்லி :
“இந்தி தெரியவில்லை என்றால் கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள்” என்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரிகள் தமிழக இயற்கை & யோகா மருத்துவர்களிடம் கூறியுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் இணைய வழிப் பயிற்சிக் கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர்கள் ஆயுஷ் அமைச்சகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்த பிறகும், அவர் தொடர்ந்து இந்தியில் உரையாற்றியதுடன், இந்தி புரியாவிட்டால் தமிழக மருத்துவர்கள் வெளியேறும்படி கேட்டுக்கொண்டார், இவ்வாறு ஒரு அதிகாரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலோனோர் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, அவர்கள் “எங்களுக்கு இந்தி தெரியாது தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள்” என பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு கடைசி வரை செவிமடுக்காத அதிகாரிகள் இதுபோல் கூறியுள்ளனர். இதேபோன்ற கோரிக்கை இந்தி தெரியாத பல மாநில மருத்துவர்களிடம் இருந்தும் எழுப்பப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கு, இரவு பகல் பாராமல் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக போராடிவரும் மருத்துவர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தனக்கு ஆங்கிலம் பேசவராது என்றும் இதுபோன்ற தேவையற்ற ஆலோசனைகளை வழங்கும் தமிழக மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆயுஷ் அமைச்சக செயலாளர் எச்சரித்துள்ளார்.
தனக்கு ஆங்கிலம் பேசவராது என்று கூறும் அந்த அதிகாரி, இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கனிமொழி எம்.பி. யிடம் “இந்தி தெரியாத நீங்கள் இந்தியர்களா? ” என்று கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்தி தெரியாதவர்களை குறிப்பாக தமிழர்களை இழிவுபடுத்துவது தொடர்ந்து அரங்கேறிவரும் நிலையில், இந்தியும் தமிழைப் போன்று ஒரு தேசிய மொழி தான் அதற்கு மட்டும் என்ன சிறப்பு அந்தஸ்த்து என்ற குரல் தமிழகத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து இதுபோல் நடந்து கொள்வதும் பின்னர் வருத்தம் தெரிவித்து அவர்களை பணியிடம் மாற்றுவதும் எந்தவிதத்திலும் பலனளிக்காது, மாறாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது தேசிய மற்றும் மாநில மொழிக் கொள்கையை தெளிவாக விளக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவே சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.