புதுடெல்லி: ‘மன்கடிங்’ முறையில் அவுட் செய்வது குறித்து டெல்லி அணியின் அஸ்வினிடம் விவாதிக்கவுள்ளதாக பேசியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
கடந்த ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கடிங் முறையில் அவுட் செய்து சர்ச்சையில் சிக்கினார் அஸ்வின். ஆனால், தனது செயலை தொடர்ந்து நியாயப்படுத்தினார் அஸ்வின்.
இந்த மன்கடிங் முறை, ஆட்ட விதிமுறைப்படி சரிதான் என்றாலும், ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ள ரிக்கி பாண்டிங் கூறியுள்ளதாவது, “கடந்த ஆண்டு அஸ்வின் எங்கள் அணியில் இல்லை. இந்த ஆண்டு அவரை இந்த அணிக்கு கொண்டுவர முடிவெடுத்தோம். அவர் பிரமாதமான பந்து வீச்சாளர்; ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகப்பிரமாதமாக வீசி வருகிறார்.
கடந்தமுறை அவர் மன்கடிங் செய்த விவகாரத்தின்போதே, எங்கள் அணி வீரர்களிடம் பேசினேன். அப்போதைக்கு அவர் செய்து விட்டார். ஆனால், இது தொடர்கதையாகி விடும், அப்படி நடக்கக் கூடாது. ஆனால் நாம் இந்த வழியில் நம் கிரிக்கெட்டை ஆடப்போவதில்லை என்று அணி வீரர்களிடம் தெளிவாக விளக்கியுள்ளேன்.
எனவே, இந்தமுறை அஸ்வினிடமும் பேசப்போகிறேன். அது கடினமான ஒரு விவாதமாகத்தான் இருக்கும். அவர் அந்த மாதிரி அவுட் செய்வது விதிகளுக்கு உட்பட்டது என்ற கருத்தை வைத்திருக்கலாம். ஆனால் ஆட்ட உணர்வுக்கு எதிரானது. குறைந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர் இந்த வழிமுறையைக் பின்பற்றக்கூடாது என்று நான் விரும்புகிறேன்” என்றுள்ளார் ரிக்கி பாண்டிங்.