சென்னை: தமிழ்நாட்டு தலைநகரில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களில்(கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதற்காக நடத்தப்படுகிற) கலந்துகொள்வோரின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த திங்களன்று மட்டும்(ஆகஸ்ட் 17), ஒட்டுமொத்த தமிழ்நாட்டில், மொத்தம் 5890 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதோடு, 120 மரணங்களும் நிகழ்ந்தன.

அதில், சென்னையில் 1185 நோயாளிகள் கண்டறியப்பட்டதோடு, 24 மரணங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில், தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள சூழல், கவலை தருவதாக உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் ஒரு நாளைக்கு 60 பேர் வரை கலந்துகொண்ட காய்ச்சல் முகாம்களில், தற்போது சராசரியாக தினசரி 35 பேர் மட்டுமே கலந்துகொள்கின்றனர்.

தொடக்க அறிகுறிகளை விரைவிலேயே கண்டறிவதற்காக நடத்தப்படும் இந்த முகாம்களில், வயதான நபர்கள் கலந்துகொள்வதற்கு அதிக தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.

சென்னையின் மொத்தம் 15 மண்டலங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் 15% வயோதிகர்கள் மட்டுமே கலந்துகொள்வதாக கூறப்படுகிறது.