சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12 நாட்கள் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சேலம் சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் சுகவனேசுவரர் கோவிலின் உப கோவிலான ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் கலந்து கொண்டு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
ஆயினும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் கோவில் நிர்வாகத்தால் முறைப்படி உரிய காலத்தில் நடத்தப்படும். அதன்படி வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி தொடங்கி செப்டம்பர் 2ம் தேதி நிறைவடைய உள்ளது. விழா நடைபெறும் 12 நாட்களும் தினசரி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மதியம் அபிஷேகம், தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
எனவே பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை அவரவர் குடியிருக்கும் இடத்தில் இருந்தே வழிபடலாம். மேலும் திருவிழா கால அபிஷேகம் கோவில் முறைப்படி நடத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.