சென்னை:
மிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மாநிலத்தின் 13 மாவட்டத்தில் மட்டும் 80% அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 89.3% பேரும் சென்னையில் 88% பேரும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இருப்பினும் கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் 55% பேர் மட்டுமே கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர். மேலும் இந்த மாவட்டங்களில் 44% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை படிப்படியாக குறைந்து கொண்டு வந்த கொரோனாவின் எண்ணிக்கை ஆகஸ்ட் 16-ஆம் தேதி 756 பேர் பாதிக்கப்பட்டதால் அதிகரித்திருக்கின்றது. மேலும் நாகப்பட்டினத்தில் ஜூலை மாதம் வரை 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.ஆனால் தற்போது 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடலூரிலும் அதிகரித்துள்ளனர். கடந்த ஜூலை 20-ஆம் தேதி 400 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடலூரில் மட்டுமே ஆகஸ்ட் 16-ஆம் தேதி 2728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இது கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காண்பிக்கிறது.

மேலும் ஒரு வாரமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது தினமும் 1000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் தினமும் 1000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைப்பற்றி புகழ்பெற்ற வைராலஜிஸ்ட் ஜேகப் ஜான் கூறுகையில்: சென்னையில் நடந்து வந்தது தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நடக்கின்றது இது ஒருமுறை ஆரம்பித்துவிட்டால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும், ஆகவே மக்கள் அனைவரும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், அந்தந்த மாவட்டங்களில் போதுமான சுகாதார வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதைப்பற்றி சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: கொரோனாவால் பாதிக்கப்படுவோர் அதிகம் உள்ள மாவட்டங்களை அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. கடலூர், தேனி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் மிகத்துல்லியமாக பகுப்பாய்வு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளோம். மேலும் கடலூரில் நிலைமையை ஆய்வு செய்ய அடுத்த வாரம் நான் கடலூர் கடலூருக்கு செல்லவிருக்கிறேன் என்றும் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.