சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று 99.99% பாதிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது என்பது தவறானது, இறப்பு சதவீதத்தில் 10 சதவீதத்திற்கு உள்ளான நபர்கள் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர். மற்ற 90% பேர் இணை நோய்களால் தான் உயிரிழக்கின்றனர். ஆனால், கொரோனா உயிரிழப்பு பட்டியலில் அவர்களையும் சேர்க்க வேண்டிய சூழல் உள்ளது.
அதுபோல, ஒரு முறை கொரோனா வந்த நபர்களுக்கு மீண்டும் 99.99 சதவீதம் கொரோனா பாதிப்பு வருவதற்கான வாய்ப்பில்லை. நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட இணை நோய்கள் மட்டுமே வருகின்றன. இதுகுறித்து கண்காணிக்க மருத்துவக்கல்லூரி மருந்துவனைகளில் விரைவில் தனி பிரிவு அமைக்கப்படும்.
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு தொடங்கி தற்போது 75 நாட்களுக்கு மேலாகி விட்டது. இதனால், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பிற பகுதிகளிலும் மெல்ல மெல்ல பாதிப்புகள் குறையும் என தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.