புதுடெல்லி:
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்திருந்த நிலையில், தற்போது அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். வென்டிலேட்டரில் வைப்பதற்கு ஒரு வாரம் முன்பு அவர் தன்னுடைய மகன் அபிஜித் முகர்ஜியை அழைத்து “எனக்கு கொஞ்சம் பலாப்பழம் கொண்டு வாருங்கள்” என்று பெங்காலி மொழியில் தெரிவித்துள்ளார்.
நான் பலாப்பழம் வாங்குவதற்காக கொல்கத்தாவிலிருந்து, மேற்கு வங்கத்தில் உள்ள எங்களுடைய கிராமமான மிராட்டிக்கு சென்றிருந்தேன். நன்கு பழுத்த 25 கிலோ எடை கொண்ட பலாப்பழத்தை வாங்கி கொண்டு, ஆகஸ்ட் 3ஆம் தேதி டெல்லிக்கு ரயில் ஏறி தந்தையை சென்று சந்தித்தேன். அப்பாவிற்கும் எனக்கும் ரயில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும்.
அன்றைக்கு அவர் பலாப்பழத்தை சாப்பிட்டார், எப்படியோ அவருக்கு சர்க்கரை அதிகமாகவில்லை. அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அப்போது அவருடைய உடல்நிலை நன்றாகவே இருந்தது. ஆனால் ஒரு வாரத்திற்கு பின் திடீரென்று அவரது மூளையில் உள்ள ரத்த உறைவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அதற்கு முன்னரே அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்ததால் அவருடைய மருத்துவ பதிவுகளை ராணுவ மருத்துவர்கள் பராமரித்து வந்தனர். ஆகையால் அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நானும் அவரை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தூரம் இருந்து நான்கு முறை பார்த்துவிட்டேன். கடைசியாக பார்த்த போது அவருடைய சுவாசம் சரியாக இருந்தது, மேலும் 84 வயதாகும் என் தந்தை நாய்கள் மீது மிகவும் பிரியம் கொண்டவர்.
என் தந்தையின் அரசியல் வாழ்க்கை எங்கள் வீடு முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. வீட்டு சுவற்றில் தந்தையுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருக்கும், அந்த புகைப்படம் எடுக்கும்போது அவர் இந்தியாவுக்கு பங்களாதேஷ் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். அவர் எப்போதும் அரசாங்க வசதிகளை விரும்பமாட்டார், சொந்த வீட்டில் இருக்கவே ஆசைப்படுவார்.
மேலும் அவர் ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் நான் தேர்தலில் போட்டியிட்டேன், ஆனால் அவர் எனக்காக ஒருபோதும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார். இது அவருடைய மிக உயர்ந்த குணத்தை காட்டுகிறது என்றே நான் நினைக்கின்றேன். என் தந்தையின் நிலை குறித்து பலர் போலியான வதந்திகளை பரப்புகின்றனர், பல போலியான செய்திகள் நாட்டிற்கு சேதத்தை விளைவித்துள்ளன. ஆகவே போலியான செய்திகளை பரப்ப வேண்டாம், என் தந்தையின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது. என் தந்தை இதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்புவதை பார்க்க நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறாக பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.