புதுடெல்லி: பாரதீய ஜனதா ஆட்சியமைத்ததிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில், உத்திரப்பிரதேசத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மொத்த நபர்களில் 37% பேர் முஸ்லீம்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை அம்மாநிலத்தில் மொத்தம் 6476 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. அதில், 125 பேருக்கு 47 பேர் முஸ்லீம்கள் என்ற கணக்கின்படி, கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையில் முஸ்லீம்களின் விகிதம் 37% என்றாகிறது. அம்மாநில மக்கள்தொகையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 19% ஆகும்.
இந்த என்கவுண்டர் சம்பவத்தில் மொத்தம் 13 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, 941 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்தப் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இந்த என்கவுண்டர் சம்பவங்கள் அதிகமாக ஷாம்லி, அலிகார், முசாபர்நகர் மற்றும் ஷஹாரன்பூர் போன்ற மேற்கு உத்திரப்பிரதேச பகுதிகளில்தான் நடைபெற்றுள்ளன.