டில்லி
அடுத்த 3 நாட்களுக்கு டில்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நாடெங்கும் வலுத்து வருகிறது. இவ்வாறு பெய்யும் கனமழையால் பல அணைகள் நிரம்பி உள்ளன. குறிப்பாகக் கேரளா மற்றும் கர்நாடகாவில் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
கர்நாடகாவில் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும் கேரளாவில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன
கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் காவிரி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் நீர்வரத்து மிகவும் அதிகரித்துள்ளது. கபினி அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்திய வானிலை மையம் இது குறித்து,” இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமேற்கு இந்தியப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்குக் கனமழை முதல் அதி கனமழை பரவலாகப் பெய்யக் கூடும்.
கிழக்கு ராஜஸ்தான், குஜராத் மாநிலம், மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்திற்குப் பரவலாக கனமழை பெய்யக் கூடும். கொங்கன் கோவாவின் வடக்கு பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்திற்குக் கனமழை அல்லது மிகக் கனழை பெய்யக் கூடும்.” என அறிவித்துள்ளது.