சென்னை: புதுச்சேரியில் பிரசித்தி பெற்றது மணக்குள விநாயகர் கோவில், அங்குள்ள லட்சுமி என்ற பெண் யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி பணியாற்றி வருகிறது. இதை கோவிலில் இருந்து யானையை அகற்றும் நோக்கில், பீட்டா அமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கேரளாவில் காட்டு யானை பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட விவகாரத்திற்கு பிறகு, கோவில் களில் பராமரிக்கப்படும் யானை விவகாரத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் கோவில்களில் உள்ள யானைகளை வனம் போன்ற பகுதியில் வைத்து பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதன் காரணமாக, புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, அம்மாநிலத்தில் உள்ள குருமாம்பேட்டு பகுதியில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் மையத்திற்கு கடந்த ஜூன் 8-ந் தேதி அழைத்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில், விநாயகர் கோவிலில் யானை இல்லாதது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, யானையை மீண்டும் கோவிலுக்கு அழைத்து வர வேண்டும் என்று பக்தர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அரசுக்க கோரிக்கை விடுத்தன.
இதை பரிசீலித்த மாநில அரசு, மணக்குள கோவில் யானை லட்சுமியை கோவிலுக்கு கொண்டு வரவும், உரிய சிகிச்சை அளித்து பராமரிக்கவும் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 18ந்தேதி, அதாவது 40 நாட்களுக்கு பிறகு, யானை லட்சுமி ஊர்வலமாக மேள தாளத்துடன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத், புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன், இந்து முன்னணி, பா.ஜனதா கட்சியினர், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோர் யானை லட்சுமியை பழங்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலில் யானைக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், யானை லட்சுமி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டதை எதிர்த்து, பீட்டா அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.