டெல்லி: பிஎஸ்என்எல் ஊழியர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துவது, அவரது அறியாமையை மட்டுமே அம்பலப்படுத்துவதாக பாஜக தலைவர் அனந்த் ஹெக்டேவுக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் பதிலடி தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கனடா தொகுதி எம்பியான பாஜகவின் அனந்த் குமார் ஹெக்டே குண்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டர். அப்போது அவர் பேசியதாவது:
பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாட்டின் கரும்புள்ளியாக மாறி விட்டது. அந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அதில் பணிபுரியும் 88,000 ஊழியர்கள் விரைவில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை செய்யத் தயாராக இல்லாத துரோகிகள்.
பிஎஸ்எல்என் நிறுவனத்தை தனியார் மயமாக்கி ஒழுங்குபடுத்த திட்டமிட்டு உள்ளது என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. அவரது இந்த கருத்தை கர்நாடக மாநில பாஜக வும் ஆதரித்துள்ளது.
இந் நிலையில், ஹெக்டேவுக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் பதிலடி தந்துள்ளது. இது குறித்து அதன் நிர்வாகிகள் கூறி இருப்பதாவது: சூறாவளி, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் நாட்டை தாக்கும்போதெல்லாம், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு சேவையை வழங்கியது பி.எஸ்.என்.எல் தான், அதே நேரத்தில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சேவைகளை நிறுத்தின என்று கூறியுள்ளனர்.
அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அபிமன்யு கூறியதாவது: பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கான மறுமலர்ச்சி தொகுப்பை இந்திய அரசு 2019 அக்டோபர் 23 அன்று அறிவித்தது உண்மை தான். இருப்பினும், வி.ஆர்.எஸ் இன் கீழ் 79,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதைத் தவிர, பி.எஸ்.என்.எல் புதுப்பிக்க வழங்கப்பட்ட மற்ற அனைத்து உத்தரவாதங்களும் இன்னும் காகிதத்தில் உள்ளன.
அரசாங்கம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியுள்ளது. இதன் அடிப்படையில், பி.எஸ்.என்.எல் 2020 மார்ச் மாதத்தில் ரூ .9,000 கோடி செலவில் தனது 4 ஜி சேவையை வெளியிடுவதற்கான உபகரணங்களை வாங்குவதற்காக ஒரு டெண்டரை உருவாக்கியது.
ஒரு அமைப்பால் எழுப்பப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில்.பி.எஸ்.என்.எல் இந்த டெண்டரை ரத்து செய்யுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. ரசாங்கத்தின் முடிவின்படி, பி.எஸ்.என்.எல் அதன் 4 ஜி சேவையை இழந்துவிட்டது என்றார்.