டெல்லி: 1000 கோடி ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவில் வசிக்கும் சீனர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலியான நிறுவனங்கள் மூலம் சுமார் 1000 கோடி ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, இந்தியாவில் வசிக்கும் சில சீனர்கள், மற்றும் அவர்களின் இந்திய உதவியாளர்கள் வீடுகளில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர்.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
போலியான நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எங்களுக்கு உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, டெல்லி, காஜியாபாத் ஆகிய நகரங்களில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் பல சீனர்களின் வீடுகளிலும், அவர்களுக்கு உதவி செய்துவரும் இந்தியர்களின் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இதில் இந்தியாவில் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் திறப்பதாக கூறி போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 100 கோடி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சில போலியான நிறுவனங்கள் குறித்த விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், சீனாவை சேர்ந்த ஒருவர் போலியான இந்திய பாஸ்போர்ட் பெற்று, இந்த பணத்தை பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளது. அவர்மீது பாஸ்போர்ட் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், இந்த சோதனையிடன்போதுரு, முடிவில் சீனாவைச் சேர்ந்த சிலருக்கு போலியான பெயரில் 40-க்கும் மேமற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கின்றன என்பதும் ரூ.1000 கோடி அளவு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. போலி ஆவனங்கள் ஹாங்காங், அமெரிக்க டாலர்கள் ஹவாலா பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது சோதனை யில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.