விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒன்றே கால் கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிய கேரள அரசு..
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ வில் விஞ்ஞானியாகப் பணி புரிந்து வந்த நம்பி நாராயணனைத் தேச துரோக வழக்கில் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள அரசு கைது செய்தது.
விண்வெளி ஆராய்ச்சி ரகசியங்களை அவர் வெளிநாட்டுக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அவர் இரண்டு மாதங்கள் ஜெயிலிலும் இருந்தார். வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அவரை விடுவித்தது.
இந்த நிலையில், தன்னை கைது செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கேரள அரசு, நஷ்டஈடு தர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
இது தவிர தேசிய மனித உரிமைகள் ஆணையமும், விஞ்ஞானிக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு அளிக்க ஆணை பிறப்பித்தது.
இந்த இரு நஷ்ட ஈட்டுத் தொகையும் அவருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆத்திரம் தீராத நம்பி நாராயணன், திருவனந்தபுரம் துணை நீதிமன்றத்திலும் கேரள அரசு மீது இன்னொரு வழக்கு தொடர்ந்தார்.
‘’கேரள அரசு தன்னை சட்டவிரோதமாகக் கைது செய்து துன்புறுத்தியது. எனவே தனக்கு நஷ்டஈடு தர வேண்டும்’’ என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மூன்றாவது வழக்கிலும் அவருக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
ஆம்.
மன உளைச்சலுக்கு ஆளான விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்கத் திருவனந்தபுரம் நீதிமன்றம் ஆணையிட்டது.
இதையடுத்து, நம்பி நாராயணனுக்குக் கேரள அரசாங்கம் நேற்று ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கியுள்ளது.
இந்த பணம் அரசுக் கருவூலத்தில் இருந்து நம்பி நாராயணன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
-பா.பாரதி.