காதல் கவிதைகள் – தொகுப்பு 10

 

பா. தேவிமயில் குமார் கவிதைகள்

 

என்ன செய்வது

 

பத்திரமாய்ப் பாதுகாத்த

பரிசுப் பொருட்களெல்லாம்

துருப்பிடித்து கிடந்ததால்,

தூர, தூக்கியெறிந்தேன் !

ஆனால்…..

அதற்குப் பின்னான,

அடுத்தடுத்த நாட்களில்

துரத்தியது உன்

துருப்பிடிக்காத நினைவுகள்

அதை என்ன செய்வது ?

எங்கு தூக்கியெறிவது ?

 

களவு

 

கோடிக்கணக்காணக்

காதலர்கள்

வந்து சென்றாலும்,

கடுகளவுக் கூட

களவுபோகவில்லை

தாஜ்மகாலின் மேலுள்ள

தாகமும், காதலும் !

 

ஆச்சரியமானவள் !!!

 

நீ இறைவனாகவே

இருந்து விட்டுப்போ !

எனக்கென்ன ?

என் காதலன்

என் சொல்லைத்தான்

ஏற்பான் ! என

ஆண்டவனுக்கு

அதிர்ச்சி வைத்தியமளித்த

அந்த முதல் பெண்

“ஏவாள்” உண்மையில்

ஆச்சரியமானவள் தான் !

 

களஞ்சியம்

 

நாளைக்கு வேண்டுமென

நினைத்து

சேமித்து வைக்காத

செல்வம் !

நாளும், நாளும்

அள்ள, அள்ளக்

குறையாமல்

காதலர்க்குக் கிடைப்பது

“கனவு”

 

.காம்

 

பார்க்கும் அனைவரும்

காதலின் பாதையில்

பயணிப்பதாகவேக்

கூறுகின்றனர் !!

ஆனால், எப்படி ?

இவ்வளவு நிறைய

மேட்ரிமோனி.காம் ?

 

ஆப்(பு)

 

காதலியை காண்பதெப்போது ?

காதலன் குணம் அறிவதெப்படி ?

காதல் கை கூடுமா ? இல்லையா ?

எனப் பல (ஆப்)புகள்

இப்போது…. விற்பனையில்

ஆம் !

காதல் வயப்படுவோர்

காதலின் வழி(லி)களை

மனதால் தேடுவதில்லை !

இணைய தளத்தால் தேடுகின்றனர்

இனி…..

காதலின் நிலை ???

 

கதைத்தல்

 

இருள் சூழ்ந்த

வானம்,

இரண்டாகப் பிளவுபட்டது !

மை கொண்ட

மங்கையின்

கண்கள் விரிந்து

கதைத்த போது !

 

உன்னோடு சேர்த்து

 

உனக்கும் எனக்கும்

ஒவ்வொரு நாளும்

யுத்தம் நடக்கிறது !

ஏதாவது ஒரு காரணம் !

ஏதோ ஒரு சந்தர்ப்பம் !

என்ன செய்வது ?

இன்றிலிருந்து

உன்னோடு சேர்த்து

யுத்தத்தையும்

காதலிக்கப் போகிறேன் !!

 

வா !

 

கிடைக்கவேயில்லை !

நீயும் நானும், தொலைத்தக்

காதல் நாட்கள்,

கிடைத்தது, நம்

காதல் கடிதங்கள் !

ஆஹா !

கண்களாலும்,

கற்பனைகளாலும்,

கனவுகளாலும்,

வெட்கத்தாலும்,

ஓடி ஒளிந்தும்,

அடடா….

எப்படியெல்லாம்

காதலித்திருக்கிறோம் என

கடிதங்கள், சொல்கிறதே !

ஆசையாக இருக்கிறது !

வா !

மீண்டும் ஒருமுறை

முதலில் இருந்துக்

காதலிக்கலாம் !

வா ! வந்து விடு ! காதலோடு !

வழக்கமான வாழ்க்கையிலிருந்து !

 

தளும்பத் தளும்ப

 

ஒருக் கோப்பை நிறைய

ஒவ்வொரு நாளும்,

தளும்பத் தளும்பக்

காதலை நிறைத்தோம் !

அப்போது ! அதனை

இருவருமேப் பருகவில்லை !

இப்போது….

இரு வேறுக் கோப்பைகளில்

இருவருமே,

எங்கேயோ இருந்து கொண்டு

நிறைக்கப் பார்க்கிறோம் !

நிறையவுமில்லை !

தளும்பவுமில்லை,

முதல் கோப்பைக்

காதலைப்போல

முழுதாக ! நிறைவாக !

 

– பா. தேவிமயில் குமார்