டில்லி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ள மூவர் குழு மூலம் ராஜஸ்தான் விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாத் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாகக் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது.   ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் துணை முதல்வர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.    சச்சினுக்கு ஆதரவாக சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளதால் ஆட்சி கலையலாம் என்னும் அச்சம் எழுந்தது.

நேற்று இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காணப்பட்டுள்ளது.   காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, செயலர் பிரியங்கா காந்தி மற்றும் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த சச்சின் பைலட் தனது மனக்குறைகளைத் தெரிவித்துள்ளார்.   அவர் அப்போது தாம் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதையும் தெளிவாகக் கூறி உள்ளார்.

இதையொட்டி கட்சியில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

இது குறித்து சச்சின் பைலட், செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எங்களுடைய அனைத்து மனக்குறைகள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.  அதன் பிறகு இதை முடிவுக்குக் கொண்டு வர மூவர் குழுவை அமைத்தார்.  இது வரவேற்கத்தக்க முடிவாகும்.  இந்த மூவர் குழு மூலம்  ராஜஸ்தான் விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.” எனத் தெரிவித்தார்.

வரும் 14 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி உள் குழப்பங்கள் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மாநில அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைமையுடன் தொடர்பில் இருந்து அனைத்து விவரங்களையும் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.