பெங்களூரு: விஜி பன்னீர்தாஸ் மகன்களான, பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீது பெங்களூருவில் நில மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னணி தொழில் குடும்பங்களில் ஒன்று விஜிபி குடும்பம் ஆகும். சொத்து விவகாரம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு, குடும்ப உறுப்பினர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு, விஜிபி சகோதரர்களில் ஒருவரான செல்வராஜ் மகன் வினோத் ராஜ்க்கு சொந்தமான நிலத்தை சகோதரர்களான பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு மீது கர்நாடக மாநிலத்தில் எப்ஐஆர் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந் நிலையில் வினோத் சகோதரர் பரத் ராஜ் தற்போது, இதே போன்ற நில மோசடி புகாரை விஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கொடுத்துள்ளார்.
இந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (BDA-BANGALORE DEVELOPMENT AUTHORITY), அஞ்சனபுரா பகுதியில் உருவாக்கிய புதிய லே அவுட்டில், எனக்கு 3 மனைகளை ஒதுக்கியது. இதை அறிந்த எனது சகோதரர்களான பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகிய மூவரும், நான் எழுதியதைப் போல ஒரு போலி கடிதம் தயாரித்து, அந்த 3 இடங்களையும் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர்.
பிறகு, அவற்றை 3ம் நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டனர். இந்த மோசடி சமீபத்தில்தான் தெரியவந்தது. எனவே என்னைப் போல் கையெழுத்திட்டு, போலி ஆவணங்களை கொண்டு நிலமோசடியில் ஈடுபட்ட பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று பரத் ராஜ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் தல்கட்டபுரா போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய தொழில் குடும்பத்தினர் மீது கர்நாடக போலீசில் பதிவாகியுள்ள நில மோசடி வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.