மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில்உள்ள வேதா இல்லம், நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதனைத் தொடர்ந்து, . நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ. 67,90,52,033 டெபாசிட் செய்தது. இதன் மூலம் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு அரசுடைமையானது என்று தமிழக அரசு அறிவித்தது.
மேலும், வாரிசுதாரர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ள லாம் என்று தெரிவித்தது.
இந்த நிலையில், வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிராக ஜெயலலிதாவின் வாரிசுகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள, ஜெ.தீபா மற்றும் தீபக் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு ஏற்கனவே தனி நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது, தீபா, ஜெயலலித உயிருடன் இருந்தபோது எங்கே வசித்தார்? எங்கே இருந்தார் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற நீதிபதி பரிந்துரைத்தார்.
இந்த நிலையில், ஜெ.தீபா ,தீபக் தொடந்த வழக்குகளின் விசாரணை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.