வாஷிங்டன்:
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் தாக்கம் 2021ஆம் ஆண்டு வரை இருக்கும் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலகின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் செவ்வாய்க்கிழமை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது கொரோனா வைரஸ் குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஓராண்டுக்கு மேல் கூட ஆகலாம் என்றும் அதனால் 2021ஆம் ஆண்டு வரை கொரோனாவின் தாக்கம் இருக்கும் என்றும் கூறினார்.
“மருத்து கண்டுபிடிப்பதுதான் மிக முக்கியம். அது கிடைக்கும் வரை நிலைமை சாதாரண நிலைக்குத் திரும்பாது.” என அவர் குறிப்பிட்டார். “வைரசை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் ஆனால், சரியான மருந்து கண்டுபிடிக்கும் வரை அது மீண்டும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கும்.” எனவும் பில்கேட்ஸ் கூறியிருக்கிறார்.
இதனிடையே, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டியுள்ளது என ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
1,502,478 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 87,320 பேர் பலியாகியுள்ளனர். 192 நாடுகள் கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கின்றன.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,32,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 14,817 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் 146,690 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 14,555 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,39,422 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,669 ஆகவும் உள்ளது.
ஐரோப்பியாவில் மட்டும் 772,592 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 61,118 பேர் இறந்துவிட்டார்கள்.