சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை யாக்கப்பட்டதை எதிர்த்து, ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்? என உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.
மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக தலைவருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் வசித்து வந்தா போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை தமிழகஅரசு, நினைவில்லமாக மாற்றி அறிவித்தது. அதைத்தொடர்ந்து, அதைத்தொடர்ந்து, அதை அரசுடமையாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதையடுத்து, வேதா நிலையம் அமைந்துள்ள நிலம், வீடு தொடர்பான சொத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, அந்த தொகையை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தியது. அத்துடன், வேதா நிலையத்தில் உள்ள அசையும், அசையா சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தியது.
தமிழகஅரசின் இந்த நடவடிக்கையை கடுமை எதிர்த்து வரும், ஜெயலலிதாவன் அண்ணன் , மகள் தீபா ஆகியோர், தமிழகஅரசின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், “சொத்துக்கள் மீது உரிமையுள்ள எங்களிடம் கருத்து கேட்காமல் கையகப்படுத்திய நடவடிக்கை என்பது நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு சட்டத்துக்கு முரணானது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வீட்டை, அரசு எடுத்துக்கொள்வது, ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாகப் பாதிக்கும்.
மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை. ஜெயலலிதாவுக்கு சொந்தமான மதிப்புமிக்க புராதன நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல. இழப்பீட்டுத் தொகையில் இருந்து வருமான வரி பாக்கியை எடுக்க, வருமான வரித்துறைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்வு விசாரணைக்கு வந்தது. வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், சொத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, அந்த இழப்பீட்டை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தி விட்டதாக வட்டார வருவாய் அலுவலர் அறிவித்து உள்ளார். அதற்கான உத்தரவு பிறப்பிக்க அவருக்கு அதிகாரம் இல்லை. மேலும், தனியாரின் சொத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது. அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு வேதா நிலையம் ஒன்றும் பொது சொத்து கிடையாது என்று வலியுறுத்தியவர், வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் வரை, இழப்பீடு தொகையை நிர்ணயித்த வட்டார வருவாய் அலுவலர் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறினார்.
அப்போது அரசு தரப்பில் வாதாடிய தலைமை வழக்கறிஞர், ‘இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாரிசுதாரர்கள் இருவரும் அறக்கட்டளை தொடங்கி சொத்துக்களை அளிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. இந்த இரு உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை அளிக்கவே வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை மனுதாரர் ஜெ.தீபா எங்கு இருந்தார்? எங்கு வசித்தார்? என கேள்வி எழுப்பினார். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்த நீதிபதி, வழக்கை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு பரிந்துரைத்தார்.