அயோத்தி: அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர், பின்னர் நிகழ்ச்சியில்போது, இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சின்னம் ராமர் கோவில் என்று பெருமிதமாக கூறினார்.
சுமார் 500 ஆண்டு காலமாக இழத்தடிக்கப்பட்டு வந்த ராமஜென்ம பூமி விவகாரத்தில் கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு காரணமாக, இன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் கலந்துகொண்ட பிரதமர் மோடி 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை கொண்டு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, உரையாற்றத் தொடங்குவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதைக் குறிக்கும் ஒரு தகடு ஒன்றை வெளியிட்டார். மேலும் ‘ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திர்’ குறித்த நினைவு தபால்தலையும் வெளியிட்டார்.
பின்னர் உரையாற்றத் தொடங்கினார். அவர் பேசியதாவது,
ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கத்தோடு உரையை அவர் துவக்கியதும், விழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஜெய்ஸ்ரீராம் என்று திரும்பக்கூறி மகிழ்ச்சியில் கைதட்டினார்கள்.
இங்கு திரண்டிருக்கும் அனைவருக்கும், கோடிக்கணக்கான ராம பக்தர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் இந்த நல்ல தருணத்தில் வழங்கிய மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய விழாவையொட்டி நாடு முழுவதும் உணர்ச்சி வெள்ளம் பொங்கி வடிகிறது. நாடு முழுவதும் ராமமயமாக இருக்கிறது. இப்படி ஒரு நன்நாள் வந்ததை தற்போது வரை பலராலும் நம்பவே முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
விழுவதும், எழுவதும் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சுதந்திர போராட்டத்தில் மக்கள் இழந்தது ஏராளம். ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாளில் அந்த போராட்ட உணர்வுகள் ஒவ்வொரு முறையும் நினைவூட்டுகிறது என்றார்.
ராமர் கோவில் போராட்டத்தில் இருந்த உறுதியை எவராலும் மறக்க முடியாது. இக்கோவிலை கட்டுவதற்கு உறுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. அவர்கள் அனைவருக்கும் ஆசிர்வாதத்தை ராமர் வழங்கி வருகிறார். நம் மனம் முழுவதும் ராமர் நிரம்பி இருக்கிறார் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ராமன் சூரியனுக்கு இணையானவன், சிறந்த மக்கள் ஆட்சியை தந்தவன் ராமன் என்று புகழாரம் சூட்டினார்.
பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு முடிந்துவிட்டது, இந்தியாவை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்த ராமருக்கு பிரமாண்டமான கோயில் கட்டப்படும்.
நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தற்காலத்து சின்னம் இந்தியாவின் கலாச்சார சின்னம் இந்த ராமர் கோவில்.
இவ்வாறு பெருமிதத்துடன் கூறினார்.
வரலாற்று நிகழ்வு: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!