சென்னை:
தமிழகத்தில் பழனி, ராஜபாளையம், திருச்செந்தூர் ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி மத்திய ரயில்வேதுறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில், அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழனி, ராஜபாளையம், திருச்செந்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நாளை முதல் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
நாளை முதல் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, முன்பதிவு மையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணச்சீட்டுகளுக்கான முழு கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது.
திருச்செந்தூரில் ஏற்கனவே பல ஆண்டுகளாக ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அதை ரயில்வே மூடியது.
இந்த நிலையில், அங்கு மீண்டும் முன்பதிவு மையம் அமைக்க கோரி கனிமொழி எம்.பி. மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, பழனி, ராஜபாளையம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களின் பயணச்சீட்டு முன்பதிவு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.