மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று வரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 14.463 பேர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 2.40 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1.46 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் இம்மாநில அரசு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் மற்றும் புதிய தளவுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இது குறித்து நேற்று மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர் சஞ்சய் குமார் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், “மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் “மிஷன் பிகின் ஏகைன்” திட்டத்தின் தொடர்ச்சியாக, ஷாப்பிங் மால்கள், சந்தைகள், உணவகங்கள், உணவகங்கள் போன்றவை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்படும். திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை.
மக்கள் அத்தியாவசியமற்ற விஷயங்களுக்காக வெளியே செல்ல அதாவது ஷாப்பிங் உள்ளிட்ட விஷயங்களுக்கு அவர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படிச் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சுயசுத்தம் பராமரித்து, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் மருத்துவக் காரணங்களுக்காக, பணிக்காக, மருத்துவ சிகிச்சைக்காக மட்டும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம் அதற்குத் தடையில்லை.” என அறிவிக்கப்பட்டுள்ளது.