சென்னை

யு டியூப் பதிவர் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 பிரபல யூ டியூப் பதிவர் மாரிதாஸ் பதிவுகள் தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வருகிறது.  எதிர்க்கட்சிகளை தாக்கி அவர் வெளியிடும் பதிவுகளால் அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.   அவர் மத்திய ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளதால் மற்றவர்களை தொடர்ந்து குறை கூறுவதாகக் கருத்துக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இன்று தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்

 

மாரிதாஸ்

இன்றைக்கு யு டியூப் வாயிலாக மாரிதாஸ் என்பவர் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை மோசமான முறையில் மற்றும் தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்துள்ளார்.  இம்மாதிரியான பேச்சுக்களை புறம் தள்ளி மக்கள் நலம் காக்க எங்கள் பணி தொடர்ந்தாலும் இத்தவறான பேச்சு அனைவரின் மத்தியில் வருத்தத்தையும் மக்களின் மனதில்  குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.

கோவிட் ஒழிப்பு பணியில் ஓய்வின்றி பணியாற்றும் 18000 மருத்துவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சார்பாக அரசு டாக்டர்கள் சங்கம் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் சுய விளம்பரத்திற்காக இவ்வாறு அவதூறாகத் தவறாகப் பேசிய மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது

 என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.