டெல்லி: 12ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும் என்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து புதிய கல்விக் கொள்கை விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
12ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும். 5+3+3+4 என்ற அடிப்படையில் பள்ளிகளில் வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 6ம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும். செய்முறை விளையாட்டுகள் வழியாக குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும். 5ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும். 8ம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர்கல்வி படிப்புகளில் படிப்புக் காலத்தில் ஓராண்டோ, ஈராண்டோ சில காலம் விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் படிப்பை தொடரலாம். எம்பில் படிப்புகள் நிறுத்தப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையில் உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும் என்று தெவித்தார்.