நான்குமுறை தேசிய விருது பெற்ற, சிறந்த நடிகராக மம்முட்டியை நமக்குத் தெரியும். அவர் மிகச் சிறந்த மனிதரும்கூட.
தனது வருமானத்தில் கணிசமான பகுதியை பொது நன்மைகளுக்காக செலவழிக்கிறார்.
கேரளாவில் “வலி மற்றும் நோய்த் தணிப்பு மைய”த்தின் மூலம், புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறார். தற்போது கேரளா முழுதும் இந்தத் திட்டத்தை விரிவு படுத்தும் முயற்சியில் இருக்கிறார் மம்முட்டி.
அதே போல நரம்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தனி அமைப்பின் மூலம் உதவி செய்கிறார்.
இந்தியத் தெருமுனை இயக்கம் என்ற அமைப்பின் மூலம், பிச்சை எடுக்கும் மற்றும் வேலை செய்யும் குழந்தைகளை அழைத்து மையங்களில் வைத்து பாதுகாத்து அவர்களுக்கு கல்வியும் வழங்குகிறார்.
காழ்ச்சா என்று ஒரு அமைப்பும் வைத்திருக்கிறார். கண் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் அமைப்பு இது.
இப்படி அவர் செய்யும் சமுதாய பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
கடந்த 2012ம் ஆண்டு, சிவகாசி பட்டாசு ஆலை ஒன்றில் பெரும் விபத்து ஏற்பட்டு 38 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயங்களுக்கு சிறந்த நிவாரணமாக அக்னிஜித் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தைத் தயாரிக்கும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மம்முட்டிக்கு சொந்தமானதாகும். சிவாகாசி விபத்தில் கடுமையாக தீக்காயங்கள் அடைந்தவர்களைக் காக்க, அக்னிஜித் மருந்து வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர். உடனே மொத்த மருந்துகளையும் இலவசமாகவே அனுப்பி வைக்கும்படி கூறிவிட்டார் மம்முட்டி. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 40 லட்சம். இனி தேவைப்பட்டாலும் இலவசமாகவே வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
அந்த மெகா மனசுக்குச் சொந்தக்காரரான மம்முட்டி பிறந்த தினம் இன்று.