மும்பை: மும்பையில் 100 நாட்களில் இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 9,000 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்தபோது 700 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதே போல், நேற்றைய தினம் 8,776 பேருக்கு சோதனை செய்யப்பட்டது.
அவர்களில், 700 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதியானது. இது 100 நாட்களில் இல்லாத குறைந்த அளவிலான பாதிப்பு எண்ணிக்கையாகும் என்று மும்பை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: நேற்று முன்தின நிலவரப்படி, 1,033 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக தற்போது 68 நாட்கள் வரை ஆகிறது. குணமடைபவர்களின் எண்ணிக்கையும் 73 சதவீதமாக இருக்கிறது.
ஜூலை 20 முதல் 26 வரை மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.03 சதவீதம் கூடியுள்ளது. மும்பையில் மொத்தமாக 1,10,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தானேவில், 34,471 பேர் சிகிச்சையில் உள்ளனர். புனேவில் 48,672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களாக நாட்டிலே மிக அதிகமாக பாதிப்புக்குள்ளான நகரமாக இருந்து வந்த மும்பையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.