சென்னை:
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி தற்போது சிறுவர் முதல் பெரியோர்கள் வரை அனைவரிடமும் செல்போன் இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த செல்போன்களால், தேவை யற்ற வதந்திகள் பரவுவது மட்டுமல்லாமல் பாலியல் ரீதியிலான வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், செல்போன் பயன்படுத்தும் சிறார்களில் குறிப்பாக டீனேஜ் வயதினர்கள் சுமார் 92 சதவிகிதம் பேர் ஆபாச வீடியோக்கள், படங்களையே அதிகம் பார்ப்பதாக ஆய்வு முடிவுகள் வந்திருப்பதாக யுனிசெப் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜுலை 30ஆம் தேதி சர்வதேச மனித கடத்தலுக்கு எதிரான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் எனப்படும் யுனிசெப் அமைப்பு சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் கடத்தல் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடத்தப்படும் பலர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவும், உடல் உறுப்பு திருட்டிற்காகவும் பயன்படுத்தப்படுவதாக பேசினர்.
அதைத்தொடர்ந்து பேசிய யுனிசெப் அதிகாரி, நாட்டில், செல்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், 18வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் 43சதவீதத்தினர் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களில் 92 சதவீத சிறுவர் சிறுமியர் இணையதளங்களில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் பார்த்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தனர்.
மேலும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் சிறுவர் சிறுமியரின் நிர்வாணப் படங்கள் குறித்து இந்திய அளவில் ஆய்வு செய்த யுனிசெப் அது தொடர்பான புள்ளி விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி 5வயது முதல் 12வயது வரையிலான 48சதவீத குழந்தைகளின் நிர்வாண படங்களும், 13முதல் 15வயது வரையில் 23.8சதவீத சிறுவர், சிறுமியர் நிர்வாண படங்களும், 16வயது முதல் 18வயதுவரையில் உள்ள 28சதவீத சிறார்களின் நிர்வாண படங்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல்களையும் தெரிவித்து உள்ளது.
எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் முகநூல் போன்ற சமூகவலைத்தள கணக்குகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மார்பிங் மூலம் சில நிர்வாண படங்கள் வெளி யிடப்படுவதால், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்து.
மேலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும்போது, அதில் ஆபாச இணையதளங்களை பயன்படுத்த முடியாத வகையில் முடக்கி வைக்கலாம் என்றும், சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்தும் போது அதில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் நண்பர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி உள்ளது.
நாட்டில் பெருகி வரும் குற்றங்களில் இருந்து பிள்ளைகளை காப்பது பெற்றோரின் கடமை என்று அறிவித்துள்ள யுனிசெப், சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்களில் சிறார்கள் சிக்கிக்கொள்ளாமல் தடுக்கும் வகையில் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
மேலும், ‘கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த கால கட்டத்தில் கடத்தல், கிளர்ச்சியாளர்களாக பயன்படுத்தப்படுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் என பல்வேறு வன்முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.
இதில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் வன்முறைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே சீராக இருந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.