டில்லி
காங்கிரஸ், பாஜக என இரு கூட்டணிகளிலும் இணையாமல் உள்ள 11 கட்சிகளில் மொத்தம் 91 எம்பிக்கள் உள்ளனர்.
சமீபத்தில் காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. அதே வேளையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், 39 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 65 கட்சிகள், ஏதேனும் ஒரு அணியில் உள்ளன.
இரு கூட்டணிகளிலும் இணையாமல் 11 கட்சிகள் இருக்கின்றன.
அவை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், பாரத ராஷ்டிர சமிதி, மதச்சார்பற்ற ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, தெலுங்கு தேசம், அகாலி தளம், அகாலிதளம் (மான்), ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி. ஆகியவை ஆகும்
இவற்றில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், ஒடிசாவில் பிஜு ஜனதாதளமும் ஆளுங்கட்சியாக உள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் மொத்தம் 63 மக்களவை தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்குச் செல்வாக்கு இழந்துள்ளன.
இக்கட்சிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் ஆகியவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
பாஜகவுக்கு எதிராக மாற்று அணி அமைக்கப் பாரத ராஷ்டிர சமிதி ஏற்கனவே முயன்று தற்போது, அம்முயற்சியைக் கைவிட்டதுடன், எதிர்க்கட்சி கூட்டணியிலும் சேரவில்லை.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 9 மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். வரும் நாடாளுமன்ற, 4 மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி., தனது கட்சியைத் தீண்டத்தகாத கட்சியாகக் கருதி, எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த 11 கட்சிகளிலும் மொத்தம் உள்ள 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போதைக்கு நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளனர்.