இலையுதிர் காலத்தில் மலை ஏறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 மலைகளை ஏறுவதற்கு 870 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
70 நாடுகளைச் சேர்ந்த 668 ஆண்கள் மற்றும் 202 பெண்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஏழாவது மற்றும் எட்டாவது உயரமான மலை சிகரங்களான தௌலகிரி (8,167 மீ) மற்றும் மவுண்ட் மனாஸ்லு (8,163 மீ) உட்பட 37 மலை சிகரங்களில் ஏறுவதற்கு புதன்கிழமையன்று சுற்றுலாத் துறை அனுமதித்தது.
இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 73 பேர், சீனாவைச் சேர்ந்த 72 பேர் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 69 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு சுமார் 1300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை 870 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நேபாளத்தில் இலையுதிர்கால மலை ஏறும் சீசன் செப்டம்பரில் தொடங்கி நவம்பர் வரை நீடிக்கும் நிலையில் இந்த சீசன் முடிய இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் உள்ளதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மலையேறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.