சண்டிகர்: சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த அரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 எம்எல்ஏக்களில்  86 பேர் (96 சதவீதம்) கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதுபோல,  90 பேரில்  12 பேர் மீது (13 சதவீதம்) குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, மாநிலத்தில் புதிய அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்பதற்கு முன்னதாக பிரதமர் மோடி மற்றும் பிற மூத்த பாஜக தலைவர்களை டெல்லியில் சந்தித்தார். ஹரியானா தேர்தல் 2024 இல் பாரதீய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி (AAP), ஜனநாயக் ஜனதா கட்சி (JJP) மற்றும் இந்திய தேசிய லோக் தளம் (INLD) ஆகியவை முக்கிய போட்டியாளர்களாகும்.  நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவில், மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 48 இடங்களை அக்கட்சியும், 37 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

கடந்த 2019 தேர்தலில், பாஜக 40 இடங்களுடன் பெரும்பான்மையை கடக்கவில்லை, ஆனால் JJP மற்றும் ஒரு சில சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

ஹரியானா தேர்தலில் மல்யுத்த வீரரும் காங்கிரஸ் தலைவருமான வினேஷ் போகட் ஜூலானா தொகுதியிலும், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியிலும், சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் ஆகியோர் வெற்றி பெற்ற முக்கிய முகங்கள்.

இந்த நிலையில், அரியானாவில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களில்   86 எம்.எல்.ஏக்கள் (96%) கோடீஸ்வரர்கள் எனவும், 12 (13%) பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என தேர்தல் உரிமைகள் அமைப்பு (ADR) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேர்தல் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் அரியானா தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி, 2019 இல் 93% ஆக இருந்த கோடீஸ்வர எம்எல்ஏக்களின் எண்ணிக்கை, இம்முறை சற்று உயர்ந்து 96% ஆக உள்ளது. அதாவது, 2024ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு 2019ல் இருந்து 59% உயர்ந்து, ரூ.9.08 கோடியிலிருந்து ரூ.14.46 கோடியாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான நிதி வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

90 எம்எல்ஏக்களில் 44 சதவீதம் பேர் ரூ.10 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

2.2 சதவீதம் பேர் மட்டுமே ரூ. 20 லட்சத்துக்கும் குறைவான சொத்துக்களை வைத்துள்ளனர்.

கட்சி வாரியாக, 96 சதவீத பிஜேபி எம்எல்ஏக்கள், 95 சதவீத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 100 சதவீத ஐஎன்எல்டி மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் என அனைவரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஹிசார் தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏ சாவித்ரி ஜிண்டால், மொத்தம் ரூ.270 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

பாஜகவின் சக்தி ராணி சர்மா, ஸ்ருதி சவுத்ரி ஆகியோர் ரூ.145 கோடி மற்றும் ரூ.134 கோடியுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 12 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மீது கொலைவழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 2019-ல் 7 பேர்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது. கட்சி வாரியாக, 19சதவீத காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 6 சதவீத பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் 67 சதவீத சுயேச்சை எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. புதிய எம்எல்ஏக்களில் 14 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

 இவ்வாறு ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.