ஈரோடு: தவெக தலைவர் விஜயின் ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, காவல்துறை கடுமையான கெடுபிடிகளை அறிவித்து உள்ளது.   84 நிபந்தனைகள், 43 கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்த நிபந்தனை ஏற்று, காவல்துறை அறிவுறுத்தல்களை  மீற மாட்டோம் என த.வெ.க.  காவல்துறையிடம்  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்னும் இரு தினங்களில் ஈரோட்டில் உள்ள “பெரியார் மண்ணில்” பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம், துங்கச் சாவடி அருகே இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மூங்கில்பாளையத்தில், நாளை மறுநாள் (டிசம்பர் 18) காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தனது பரப்புரை வாகனத்தில் உரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை மொத்தம் 84 கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளில், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையை உறுதி செய்யும் பல அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

கரூர்  சோகத்தை தொடர்ந்து, தவெக தலைவர் விஜயின் தேர்தல் பிரசாரத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல்  வருவதற்கு முனபே, அவரது சுற்றுப்பயணத்தை முடக்கும் நோக்கில்,  காவல்துறையினரைக்கொண்டு, ஆட்சியாளர்கள் கடுமையான கெடுபிடிகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இவை அனைத்தையும் தாங்கி, சமீபத்தில் தவெகவில் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சரான  செங்கோட்டையன் , விஜய் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், காவல்துறை நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் பல புதுமையான ஏற்பாடுகளை உறுதிப்படுத்தினார். கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள உயரமான கட்-அவுட்களில் தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் ஏறி விபத்துகளைத் தவிர்க்க, அவற்றின் மீது முள் கம்பிகள் சுற்றப்படும் என அவர் தெரிவித்தார். மேலும், கூட்டம் நடைபெறும் இடத்தில் தேவையான அளவு குடிநீர், அவசரகால ஊர்திகள், கழிவறைகள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அரண்கள் அமைப்பது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளன என்றும் செங்கோட்டையன் உறுதியளித்தார்.

தமிழகத்தில், எதிர்காலத்தில் துாய்மையான தலைமை உருவாக வேண்டும். இரண்டு இயக்கங்களை துாக்கி எறிந்துவிட்டு, புதிய இயக்கத்தை கொண்டு வருவோம். விஜயை ஆட்சி பீடத்தில் அமர வைப்பதே என் லட்சியம். எந்த சக்தியாலும் விஜய் ஆட்சியில் அமர்வதை தடுக்க முடியாது; 234 தொகுதிகளிலும் வெற்றிக்கனி பறித்து, விஜயிடம் ஒப்படைப்போம்என்றும்தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விவரம்:

விஜய் மக்கள் சந்திப்புக்காகக் காவல்துறை சார்பில் மொத்தம் 84 நிபந்தனைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், தவெகவினர் பூர்த்தி செய்ய வேண்டிய 43 முக்கியக் கட்டுப்பாடுகள் தற்போது வெளியாகியுள்ளன. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தவெக நிர்வாகிகள் இந்த நிபந்தனைகளை ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்து வரும் நிலையிலும், “நிபந்தனைகளை மீற மாட்டோம்” என்று காவல்துறையிடம் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் இடத்திற்கான முக்கிய விதிகள்

இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் இருப்பதால், போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க சில கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளன:

பிரசார மேடை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குறைந்தது 250 அடி தூரம் தள்ளி மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.

சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் மக்களுக்கும் இடையூறு ஏற்படாமல் இருக்க, சாலையின் வலதுபுறமாக பார்வை தடுப்புகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.

மக்கள் கூடும் இடம் ஒரு சதுர வடிவில் (Box வடிவில்) மட்டுமே இருக்க வேண்டும். இதற்கான தெளிவான வரைபடத்தையும் காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சதுர வடிவில் அமைக்கப்பட்ட இந்த கூட்ட அரங்கில், அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 80% மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் (உதாரணமாக 500 பேர் கொள்ளளவு என்றால், 400 பேருக்கு மட்டுமே அனுமதி).

அவசர நிலை மற்றும் ஒழுங்குமுறை

கூட்டம் காலை 11 மணி முதல் சரியாக 1 மணிக்குள் கண்டிப்பாக நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

மக்கள் மற்றும் தொண்டர்களை உள்ளே அனுமதிக்கும்போதும், வெளியேற்றும்போதும் தள்ளு முள்ளு இல்லாமல், வரிசையாக, இடைவேளி விட்டு அனுப்பப்பட வேண்டும்.

அரங்கில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் (பாக்ஸுக்கும்) போதுமான குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும்.

கூட்டத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான மருத்துவக் குழுக்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் கட்டாயம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மருத்துவக் குழுக்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாகச் சென்று வர தனி வழி அமைக்கப்பட வேண்டும்.

அருகில் உள்ள உயரமான விளம்பர பேனர்கள் மீது தொண்டர்கள் ஏறாத வகையில், அதைச் சுற்றி கம்பி வேலி அல்லது தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

இறுதிக் கட்டளைகளும் எச்சரிக்கையும்

விஜய் வரும் வாகனத்தை தொண்டர்கள் தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது.

விஐபி வாகனங்கள் செல்லும் வழியில் 10 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. பட்டாசு, ஆயுதங்கள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை நிகழ்ச்சிக்கு எடுத்து வர முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகள், காவல்துறையின் அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இந்த அனைத்து விவரங்களையும் டிசம்பர் 17-ஆம் தேதிக்குள் தவெகவினர் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கியமாக, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கக்கூடிய நிர்வாகியின் பெயர் கண்டிப்பாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று காவல்துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

[youtube-feed feed=1]