சென்னை: தமிழ்நாட்டில் SIR திருத்த பணிகள் நிறைவடையும் நிலையில், சுமார் 77 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள சென்னையில் மட்டும் 10.40 லட்சம் பேர் நீக்கப்படலாம் தகவல்கள் தெரிவிக்கின்றன இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளா் பட்டியலில் இந்தியா் அல்லாதவா்கள் சோ்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து நீக்கவும், இறந்த வாக்காளா்கள் பெயா்கள் மற்றும் ஒரு நபா் இரு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்து நீக்கவும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே முதல்கட்டமாக பீகாரில் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் தோ்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த பணிகள் கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வீடுவீடா மற்றும் முகாம்கள் அமைத்து, வாக்காளர் விவரங்கள் கோரப்பட்டது. இதையடுத்து, நிரப்பப்பட்ட எஸ்ஐஆர் படிவங்கள் வாங்கி, அதை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்றது. இடையில், மழை மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, எஸ்ஐஆர் படிவம் இணையத்தில் ஏற்றுவதற்கான கால அவகாசம் டிச. 11 வரை நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, 6 கோடியே 36 லட்சம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு, அதில், 5 கோடியே 18 லட்சம் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சுமார் 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, வாக்காளர் பட்டியலில் இருந்த உயிரிழந்தவர்கள் 25 லட்சத்து 72 ஆயிரம் பேர் நீக்கப்பட உள்ளனர். அதுபோல, தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்கள் என சுமார் 8 லட்சத்து 95 ஆயிரம் பேர் இருப்பதாகவும், நிரந்தமாக இடம் பெயர்ந்தவர்களில் 39 லட்சத்து 27 ஆயிரம் பேர் என்றும், ஆக மொத்தம் சுமார் 77 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது. , தலைநகர் சென்னையில் மட்டும் 10 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு உயிரிழந்தவர்களில் மட்டும் 1 லட்சம் 49 ஆயிரம் பேர் நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 89 ஆயிரம் வாக்காளர்களும், காஞ்சிபுரத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களும் நீக்கப்பட வாய்ப்புள்ளது. திருவண்ணாமலையில் 2 லட்சத்து 58 ஆயிரம் பேரும், கோவை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஈரோட்டில் 2.80 லட்சம் பேர், சேலத்தில் 2 லட்சம் பேர், நாமக்கலில் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 3 லட்சத்து 51 ஆயிரம் பேரும், திண்டுக்கலில் 3 லட்சம் பேரும், கடலூரில் 2 லட்சத்து 43 ஆயிரம் பேரும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தஞ்சாவூரில் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர், திருவாரூரில் 1 லட்சம் பேரும், மதுரை மாவட்டத்தில் 3 லட்சத்து 81 ஆயிரம் பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 51 ஆயிரம் பேரும், தென்காசியில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 88 ஆயிரம் பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேரும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனிடையே, எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மூலம் தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறினார். எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு பணிகள் வரும் 11ஆம் தேதி நிறைவடையும் சூழலில், வரைவு வாக்காளர் பட்டியல் 16ஆம் தேதி வெளியாகிறது.