சென்னை:
ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் பரிந்துரையின் நிலை என்ன என்ற கேள்விக்கு, 2 வாரத்தில் பதில் தெரிவிப்பதாக தமிழகஅரசு அவகாசம் கேட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வரும் நிலையில்,அவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் இது தொடர்பாக ஆளுநர் இறுதி முடிவு எடுக்கலாம் என்றும் செக் வைத்தது.
இதையடுத்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அத்தீர்மானம் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012ல் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதன் தற்போதைய நிலை குறித்து கேட்டு தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையில் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக உள்துறை செயலாளரிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்
[youtube-feed feed=1]