3 ஆண்டுகளில், பஞ்சாப்பில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை 63 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் உதவிபெற தகுதியானவர்கள் குறித்து வகுக்கப்பட்ட விதிமுறைகள் அல்லது அவர்களின் KYC- ஐ மின்னணு முறையில் பதிவு செய்ய முடியாததால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதகா தி ட்ரிப்யூன் நாளிதழ் தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை டிசம்பர் 2019- மார்ச் 2020 இல் 23,01,313 ஆக இருந்து ஏப்ரல்- ஜூலை 2023 இல் வெறும் 8,53,960 ஆகக் குறைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 5,41,512 விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் வகுத்துள்ள விதிமுறைகளின்படி விவசாயிகள் தங்களின் சான்றுகளைச் சரிபார்க்க முடியாததால், இந்திய அரசால் வழங்கப்பட்டும் ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகையைப் பெற முடியவில்லை.

கணினி எழுத்தறிவு இல்லாத விவசாயிகள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாமல் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இந்த உதவி மிகவும் தேவைப்படுகிறது என்று அம்மாநில விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

PMKisan என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் 17.59 லட்சம் பயனாளிகள் தலா ரூ. 2,000 வீதம் 12 தவணைகள் வரை பெற்றுள்ளதாக ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது. தவணைகள் வருடத்திற்கு மூன்று முறை வழங்கப்படும். இருப்பினும், 13 மற்றும் 14 வது தவணைக்கு முன்னர் இதில் பெரும்பாலோனரின் தரவுகள் இல்லாததால் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.