ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று மட்டும் இரு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என காஷ்மீர் மாநில ஐஜிபி விஜயகுமார்  தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளால் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. அதற்கு இந்திய பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் மாநில காவல்துறையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரே நாளில் நடந்த 2 என்கவுன்ட்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவட்டங்களில் நேற்று மாலை இச்சம்பவம் நடந்தது.

நேற்று மாலை நவ்காம் அனந்தநாக் மாவட்டம், குல்காம் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதை  காஷ்மீர் மண்டல காவல்துறை ஐஜிபி விஜய்குமார்  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்டில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அடையாளம் தெரிந்தது. மற்ற இருவரின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது மிகப்பெரிய வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.