சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு தமிழகஅரசின் போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு செல்ல இதுவரை 55ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்தாக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீபாவளிக்கு இந்த ஆண்டும் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி, வரும் 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்படி, முதல்கட்டமாக நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில், நாள்தோறும் இயக்கப்படும் 2 ஆயிரம் பேருந்துகளுடன் சென்னையில் இருந்து சிறப்பு இயக்கமாக 225 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு 900 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தீபாவளிக்கு, அரசு விரைவுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான முன்பதிவு கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு 4 நாள்களுக்கு முன்னதாக விரைவுப் பேருந்துகளில் பயணிக்க 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு 55 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in, www.redbus.in உள்ளிட்ட இணையதளங்களிலும், முன்பதிவு மையங்களிலும் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்துகளின் இயக்கம் அறியவும் புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கே.கே.நகர், மெப்ஸ், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் ரெயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது இயக்கப்பட்ட பேருந்துகளின் மூலம் 6.7 லட்சம் பேர் பயணித்தனர். ஆனால், நடப்பாண்டில், கொரோனா காரணமாக பலர் சொந்த ஊரிலே இருந்து வருவதாலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பபடாமல் இருப்பதாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.