இந்தியாவில் விமான போக்குவரத்து கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது, இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 4 நாட்களாக முழுஅளவில் செயல்படமுடியாமல் தத்தளித்து வருகிறது.

நேற்று 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதனால் விமான பயணிகள் தாங்கள் பயணம் செய்யவிருக்கும் விமானம் இன்று பறக்குமா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

அப்படியே பறந்தாலும் அது சரியான நேரத்துக்கு தரையிறங்குமா என்பதும் தாங்கள் கொண்டு சென்ற லக்கேஜ் சரியாக வந்து சேருமா என்பதும் யூகிக்க முடியாத நிலையில் உள்ளது.

விமானப் பயணம் சூதாட்டம் போல் ஆகிவிட்ட போதும் லாபம் மட்டும் ஏர்லைன் நிறுவனத்துக்கு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஏன் நடக்கிறது ? இதுக்கு காரணம் என்ன?

இந்த விமான பயண சிக்கல் அனைத்தும் IndiGo என்ற இந்தியாவின் மிகப் பெரிய ஏர்லைன் நிறுவனத்தில் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

சில விமானங்கள் 8 மணி, 12 மணி நேரம் தாமதமானது. சில வரவே இல்லை, கடந்த 48 மணி நேரத்துல மட்டும் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தானது.

பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் திணறி வருகின்றனர், சிலர் இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் உச்ச கட்ட குழப்பம் நீடிக்கிறது.

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு மட்டும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமென்ன ? தொழில்நுட்ப பிரச்சனைகள், கோடை வெப்பம், ஏர்போர்ட் நெரிசல் மட்டுமன்றி விமானப் பயண நேர வரம்பு (Flight Duty Time Limit – FDTL) என்ற DGCA வின் புதிய போக்குவரத்து விதிகள் முக்கிய காரணமாக் கூறப்படுகிறது.

FDTL — Flight Duty Time Limit. பைலட்‌ஸ்‌ பாதுகாப்புக்கான புதிய விதிகள் குறிப்பிடுவதாவது :

வாரத்துக்கு குறைந்தது 48 மணி நேரம் ஓய்வு, பைலட்களுக்கு ஓய்வு நேரம் 36 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாக அதிகரித்துள்ளது

முன்னதாக வாரத்துக்கு 6 முறை இரவு நேர விமானங்களை இயக்கி வந்த பைலட்டுகள் இனி வாரம் 2 விமானங்கள் மட்டுமே இரவு நேரத்தில் இயக்க வேண்டும்.

இதனால் பைலட்டுகளுக்கு அதிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து கூடுதல் பைலட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது.

இது பாதுகாப்பான பயணத்திற்கு நல்லது என்ற போதும் நாளொன்றுக்கு 2200 விமானங்களை இயக்கி வரும் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு இது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் இயக்கம் விமானங்களில் குறைந்தபட்சம் 10% விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும் அது மிகப்பெரிய எண்ணிக்கையாகவும் பயணிகளுக்கு பெரும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும், இண்டிகோ நிறுவனம் அதிகப்படியான இரவு நேர விமானங்களையும் அதிகாலை நேர விமானங்களையும் இயக்குவதால் சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்தின் இந்த புதிய கட்டுப்பாடுகள் காரணமாக சிக்கலை சந்தித்து வருகிறது.

விமான நிறுவனத்திற்கு இது முன்கூட்டியே தெரியும் என்ற போதும் இதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாததால் இண்டிகோ நிறுவனம் முற்றிலும் செயலிழந்தது போன்ற நிலை உருவாகியுள்ளது.

ஒருகாலத்தில் நேரம் தவறாமல் சென்றதாகப் புகழப்பட்ட இண்டிகோ இப்போது அதில் 20% கூட கடைபிடிக்க முடியவில்லை 20 விமானத்தில 1 மட்டுமே நேரத்துக்கு செல்கிறது.

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் திட்டம் குறித்து DGCA கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு 48 மணி நேரத்தில் நிலைமையை சரி செய்வதாக விமான நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இதனால் அடுத்த சில தினங்களுக்கு இதேபோன்ற நிலை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் பயணிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும், தங்களது விமான பயணம் குறித்த நிலையை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.